பக்கம்:திருவருட் பயன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அவைபெற்ற உடல் கருவி உலகு நுகர்பொருள்களாய மாயேயங்களை அழித்து மாற்றுதல். ஆசு - குற்றம்; என்றது எல்லாக் குற்றங்கட்கும் மூலமான ஆணவமலமாகிய மாசினை.அடங்க - ஒடுங்க, போக்கும் அவன் - போக்குதலாகிய அந்தத்தைச் செய்யும் மகா சங்காரகாரணனாகிய அச் சிவபெருமான். போகா - நீங்காத. புகல் - புகலிடம்; பற்றுக் கோடு. இறைவன் செய்யும் முத்தொழில்களுள் முதலிரண்டனையும் 'ஆக்கி அளித்து' என எச்சப்படக் கூறி, மூன்றாவதாகிய அழித்தலை முதல்வனாகிய அவனொருவனுக்கேயுரியதாக அவனொடு புணர்த்திப் 'போக்குமவன்’ என்றது.

   "அவனவ ளதுவெனும் அவைமூ வினைமையின்
    தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாம்
    அந்தம் ஆதி யென்மனார் புலவர்"

என வரும் சிவஞானபோத முதற் சூத்திரப் பொருளை உளங்கொண்டு கூறியதாகும். முதனூலாசிரியராகிய மெய்கண்டார் "அவன் அவள் அது எனும் அவை எனச் சுட்டிய உலகத் தொகுதியினை எவையும் என்ற வினாவினாலும், மூவினைமையின் தோற்றிய திதியே’ என்பதனை ஆக்கி அளித்து என்ற தொடராலும், ஒடுங்கி மலத்துலதாம்’ என்பதனை 'ஆசுடன் அடங்கப் போக்கும்’ என்ற தொடராலும், 'அந்தம் ஆதி' என்பதனைப் 'போக்குமவன் போகாப் புகல்' என்ற தொடராலும் இந்நூலாசிரியராகிய உமாபதிதேவ தம்பிரானார் தொகுத்துணர்த்திய நுட்பம் உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

 'ஆசுடன் அடங்கப் போக்குமவன்' என்றது.
 "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (5)

என்னும் திருக்குறளையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/37&oldid=514320" இலிருந்து மீள்விக்கப்பட்டது