பக்கம்:திருவருட் பயன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

அடியார்கள் உள்ளத்தே அகலாதுறைதல் இறைவனது இயல்பெனின், அம்முதல்வன் ஏனையிடங்களில் நிலையாய்த் தங்குதல் இல்லையோ என ஐயுற்று வினவிய மாணாக்கர்க்கு ஐயம் நீங்க அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும்.

       8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
          தங்குமவன் தானே தனி.

இ-ள்: எல்லாவுலகங்களிடத்தும் அளவிறந்தவுயிர்கள் மாட்டும் நீரிடை நின்ற தழல்போல இரண்டறக் கலந்திருந் தான் ஆயினும் அக்கடவுள் அப்பதங்களிற் றங்காது நீங்கி ஏகனாய் நிற்பன் என்க.

ஏகாரம் பிரிநிலை.பார்பதம் அண்டமனத்துமாய் (திருவாசகம்) என்பதனுள் 'நீருறுதீ' என்றருளிச் செய்தவாறு காண்க. நீருறுதீ என்பது காய்ந்த புனலின்கண் உளதாய வெம்மை.

இதனால் யாண்டும் நிரம்பி நிற்பினும் அதிற்றோயான் என்பது கூறப்பட்டது.

விளக்கம்:- இறைவன் அடியார்கள் உள்ளத்தே அன்பு மீதுாரக் குடியாக்கொண்ட கொள்கையனாயினும் எவ்விடத்தும் எல்லாவுயிர்களிலும் நீக்கமறக்கலந்து ஒன்றாய் விளங்குதலே அவனது இறைமைத்தன்மை என்பதும், இங்ஙனம் அம் முதல்வன் கலப்பினால் உலகுயிர்களோடு ஒன்றாய் நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு வேறாய்த் தனித்து நிற்றல் அம்முதல்வனது இயல்பென்பதும் உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/44&oldid=514410" இலிருந்து மீள்விக்கப்பட்டது