பக்கம்:திருவருட் பயன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

என்றது, என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய கடவுளை. தோற்றக் கேடுகளின்றி என்றும் உள்ளதாய், தன்பால் ஒன்றும் ஊடுருவிக்கலத்தல் இயலாமையால் துய்மையுடையதாய், தனக்கு எத்தகைய விகாரமுமின்றி என்றும் ஒரு பெற்றியதாய் உயிர்களின் உள்ளத்தே அகலாது நிற்றல் இறைவனியல்பு என்பது புலப்பட, அம்முதல்வனை உள்ளது எனக்குறித்தார். ஐயத்தினின்றும் நீங்கித் தெளிந்த மெய்யுணர்வுடைய பெரியோர்க்கே அவனது இயல்பு இனிது விளங்கும் என்பார். 'ஐயம் இலது' என்றார். அன்பினால் தன்னை இடைவிடாது நினைந்து போற்றும் அடியார்கள் உள்ளத்தே அவர்கள் நினைந்த அவ்வுருவாய் விளங்கித்தோன்றி நல்லனவும் தீயனவும் இன்ன இன்ன என அறிவுறுத்தி மனத்தினைத் திருத்தி அவர்தம் அறிவுக்கறிவாய் நீங்காது உடன் நின்று அவர்தம் பிறவிப்பிணியைப் போக்கி வீடுபேற்றின்பத்தினை வழங்கும் அருமருந்தாகத் திகழ்வோன் இறைவனாகிய மெய்ப்பொருள் என்பார், "உணர்வாய் ஒவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து" என அம்முதல்வனைச் சிறப்பித்துப் போற்றினார். ‘மந்திரமுந்தந்திரமும் மருந்துமாகித் தீராநோய்தீர்த்தருள வல்லான்’ (6.54-8) எனவும், 'மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே’ (திருவாசக-நித்தல்-18) எனவும் வரும் அருள் மொழிகள் இங்கு நினைக்கத்தக்கன. ஒவுதல்-இடையறவுபட நீங்குதல். ஒவாது என்னும் வினையெச்சம் தீர்க்கும் என்னும் வினைகொண்டு முடிந்தது. மன்னுபவம்-அனாதியே தொடர்ந்து வரும் பிறவிப்பிணி. இதனையே 'தீராதநோய்' எனக்குறித்தார் திருநாவுக்கரசர்.

      ஒர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
      பேர்த்துள்ள வேண்டா பிறப்பு   (திருக்குறள்-357)

என்பதனை உளங்கொண்டு, 'உளது' மன்னுபவந் தீர்க்கும் மருந்து உன்னும் எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/49&oldid=514441" இலிருந்து மீள்விக்கப்பட்டது