பக்கம்:திருவருட் பயன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

காண்டற்குத் துணை புரியும் ஒளியுடைப் பொருளும் காட்சியைத் தடைசெய்து நிற்கும் புற இருளும் கட்புலனாகும் உலகமும் இருந்தும் அவற்றாற் பயன் கொள்ளுதற்குரிய கண்ணிடத்தே தெளியவுணரும் ஒளிக்கூறு இல்லையாயின் அவற்றாற் பயனில்லாதவாறுபோல, உயிரறிவுக்குத் துணை புரியும் சிவனது அருளொளியாகிய ஞானமும், உயிரறிவை மறைப்பதாகிய ஆணவ இருளும், உயிர்களின் நுகர்ச்சிக் குரிய உலகமும் ஆகிய இம் மூவகைப் பொருளும் இருந்தும் உயிர்கட்கு அறிவென்பது இல்லையாயின் மேற்குறித்தவற்றின் உண்மையாற் சிறிதும் பயனில்லை என்பதாம்.

சொல்லக்கருதியபொருளை வெளிப்படக் கூறாது மறைத்து, அதனைப்புலப்படுத்துதற்குரிய ஒத்ததொரு பொருளைக் கூறுதலின் இக்குறள் ஒட்டு என்னும் அணியாகும். (6)

பதி பசு பாசம் எனப்படும் முப்பொருளிலேயும் அறிதலைச் செய்யும் பொருள் யாது? என வினவிய மாணாக்கர்க்கு அதனை விளங்க அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.

        17. சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை
            உய்த்தல்சத சத்தாம் உயிர்.

இ-ள் : நிலைபெற்ற ஞானமாகிய சிவனுக்கு அநித்தங்களான சடப்பொருள்களைப் புதிதாகச் சுட்டியறிய வேண்டுவதில்லை. அசேதனங்களாகிய தத்துவங்கட்கு அறிவென்பதில்லை. இவ்விரண்டு தன்மையாயின், அவ்விடத்து இவற்றைத் தன்னுணர்வு செலுத்திப் பகுத்தறியும் உயிர்கள் சத்தும் அசத்தும் அன்றியே சதசத்தாதல் வேண்டும்; அல்லது கூடாதென்பது கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/62&oldid=514487" இலிருந்து மீள்விக்கப்பட்டது