பக்கம்:திருவருட் பயன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இச் சூத்திரத்தை அடியொற்றி அமைந்தது, திருவருட் பயனிலுள்ள இப்பதினேழாங் குறளாகும். ஈண்டு அறிதல் என்றது, அழுந்தியறிதலாகிய அனுபவித்தலை. உய்த்தல் என்றதும் அது.

சார்ந்ததன் வண்ணமாந் தன்மையதாகிய ஆன்மாவின் சிறப்பியல்பு குறித்த இம்முடிபு,

   "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு"   (திருக்குறள்-452)

எனத் தெய்வப்புலவர், 'மாந்தர்க்கு அறிவு இனத்தியல்பதாகும்' எனக்குறித்த பொதுவகை முடிபிலிருந்து உய்த்துணர்ந்து கூறிய சிறப்புவகை முடிபாகும். ஆகவே, உயிர்கள் முற்றுணர்வுடைய இறைவனைப்போன்று எல்லாம் அறிந்தனவுமாகாமல், ஏனைய அறிவில்பொருள்களை யொத்து ஒன்றும் அறியமுடியாதனவு மாகாமல், இரண்டுங்கெட்ட நிலையினவாய் அதுவதுவாய்ச், சார்ந்ததன் வண்ணமாந் தன்மையன என்பது பெற்றாம். சத்தும் அசத்தும் ஆகிய இவ்விரு தன்மையு மின்றிச் சதசத்தாய் நிற்றல் உயிரின் இயல்பென்பதனை,

 'இரண்டுமிலித்தனியனேற்கே’ (திருவாசகம்-30)

எனத் திருவாதவூரடிகள் தம்மியல்புபற்றிக் கூறுமிடத்துத் தெளிவாகக் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

இவ்வாறு ஆன்மா சத்து-அசத்து என்பவற்றுள் ஒரு பாற்படாது இருதிறனறிவுளதாய் நிற்கும் என்பதற்கு இவ்வுலகில் உவமையாக எடுத்துக்காட்டத்தக்கபொருளுண்டோ? என வினவிய மாணாக்கர்க்கு உவமை கூறி விளக்குவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும்.

          18. இருளில் இருளாகி எல்லிடத்தில் எல்ஆம்
              பொருள்கள் இலதோ புவி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/65&oldid=514490" இலிருந்து மீள்விக்கப்பட்டது