பக்கம்:திருவருட் பயன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



47

எனஆசிரியர் திருவள்ளுவர் உடம்பொடு புணர்த்துக்கூறிய உயிர்களின் பிறவித்துன்பத்தை இந்நூலாசிரியராய உமாபதி தேவர் உயிர்கட்கு உரிமையுடையதாக இயைத்துக் கூறிய திறம் உய்த்துணர்ந்து உளங்கொளத்தக்கதாகும்.

'அருள்தெரிவது என்று’ என இரங்கிய குறிப்பினால், உயிர்கள் அளவிலா இடருட்பட்டு வருந்துவதற்கு உயிரறிவைத் தொன்மையே மறைத்துள்ள அகவிருளாகிய ஆணவ மலமே காரணம் என்பதனை உய்த்துணரவைத்து, அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தாராயிற்று.

3. இருண்மலநிலை

அஃதாவது, அறியாமையே வடிவாகிய ஆணவமலத்தினது தன்மை. உயிரவை நிலையென்பதுபோலப் பொதுப் படப் பாசங்களதுநிலை யென்னாது இருண்மலநிலை யென்றதனால், ஒழிந்த மாயை கன்மங்கள் எவ்வாறடங்குமோ வெனின், ஒருமொழி யொழிதன் னினங்கொளற்குரித்தே' (நன்னூல்-399) என்பதனால் அடங்கும். முற்கிளந்த உயிர்களாற் புணரப்பட்ட பாசத்தின் இயல்புகூறுதலின், மேலை அதிகாரத்தினோடு இதற்கு இயைபுடைத்தெனக் கொள்க.

          21. துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
              இன்றென்ப தெவ்வாறும் இல்.

இ-ள்: தொன்றுதொட்டு இடைவிடாது வரும் பிறவிக் துன்பமும், மேலாய வீட்டின்பமும், இவற்றைக் கூட்டி முடிப்பதாய முதல் துணை நிமித்தங்களும் இல்லையென்று அறுதியிட்டுக் கூறுதல், காண்டல் முதலிய அளவைகள் எல்லாவற்றானும் இல்லை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/70&oldid=514508" இலிருந்து மீள்விக்கப்பட்டது