பக்கம்:திருவருட் பயன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இ-ள் : அந்தகாரமானது, வேறொரு பொருளையுங் காணாமல் மறைத்துத் தன்னுருவம் காட்டி நிற்கும்; ஆணவமானது தன்னுருவத்தையும் ஞானத்தையும் காட்டாமல் நிற்கும் என்க.

இதனால், இவ்விருளினும் மிகக் கொடியது ஆணவமென்று கூறப்பட்டது.

விளக்கம் : ஆணவமல மறைப்பின் கொடுமையினை உணர்த்துகின்றது.

'இருள் ஒரு பொருளும் காட்டாது, உருவம் காட்டும்; இது, இரு பொருளும் காட்டாது' என இயைத்துப் பொருள் கொள்க. 'இருள்” என்றது பூத இருளை. உருவம் என்றது இருளாகிய தன்சொரூபத்தை. இது என்றது அகவிருளாகிய ஆணவமலத்தை. இருபொருள் என்றது, ஆணவமலமாகிய தன்னையும் அதனால் மறைக்கப்படுவதாகிய உயிரறிவையும். புற இருளாகிய பூத இருளும் அகவிருளாகிய ஆணவமலமும் மறைத்தற்றெழிலால் தம்முள் ஒக்குமாயினும், பூத இருளானது பண்டபதார்த்தங்கள் எல்லாவற்றையும் மறைத்தும் மறைத்து நிற்பதாகிய தான் இதுவெனத்தோன்றி நிற்கும்; அகவிருளாகிய ஆணவமலமோ பொருள்களை மறைத்தலோடு இன்ன தன்மைத்தென ஒருவருமுணராதவாறு தன்னையும் மறைக்கும் திண்மையுடையது என்பதனைத் தெளிவாக விளக்குதலால் இது, வெளிப்படையாக வந்த வேற்றுமையணியின் பாற்படும். இவ்வாறு தன்னால் மறைக்கப்படுவதாகிய உயிரையும் மறைத்து நிற்பதாகிய தன்னையும் காட்டாத திணிந்த இருளாதல்பற்றி இவ்வாணவமலத்தினை 'இருளாயவுள்ளத்தின் இருள்' என ஏனைய இருளின் வேறுபடுத்துரைப்பர் திருநாவுக்கரசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/77&oldid=515233" இலிருந்து மீள்விக்கப்பட்டது