பக்கம்:திருவருட் பயன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வேறாக இருள்மலம் என்பதொன்று உண்டு என அறிவுறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

     27. இருளின்றேற் றுன்பென் உயிரியல்பேற் போக்கும்
         பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

இ-ள் : இருளாகிய அவிச்சை இல்லையாயின், இந்திரியக்கட்கு ஏவல் செய்யும் பிறவித் துன்பம் படற்குக் காரணம் என்னை? அஃது ஆன்மாவினது சுபாவமாயின் நீங்காது; நீக்குஞ் சிவஞானம் உண்டாயின் அதனுடனே உயிருங் கெட்டுப்போம். ஆதலால், எனவே பிறவித் துன்பத்திற்கு நிமித்தம் அவிச்சை என்பதாயிற்று.

இதனால், அவிச்சையில்லை யென்பாரை உண்டென்று மறத்துக் கூறப்பட்டது.

விளக்கம் : உயிர்கள்படும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாய் உயிர்களைப்பற்றியுள்ள குற்றம் ஆணவமலம் என்பது உணர்த்துகின்றது.

ஆணவமலம் என்பதொன்று உயிர்களைப்பிணித்து நிற்கவில்லை என்று அதன் உண்மையை மறுத்துரைப்பாயாயின் ஒரு குற்றமுமில்லாத உயிர்களுக்குச் சுகதுக்கங்களாகிய வேதனை வருவானேன்? அங்ஙனம் வேதனையுறுதல் ஆன்மாவுக்கு இயற்கை என்று நீ சொல்வாயாயின் அவ்வேதனையைப் போக்க வல்ல பொருளாகிய சிவஞானம் தோன்றுங்கால் அவ்வேதனைக் குணமுடைய குணியாகிய ஆன்மாவும் கெட்டொழியும் எனக்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறன்றித் துன்பத்திற்குக் காரணமாகிய இருள்மலத்தின் வலிகெட்டொழிய, என்றும் நிலைபேறுடைய உயிர்கள் பேரின்பத்தைத் தலைப்படுதலால், ஆணவமலத்தினை உயிரின் இயல்பாகக் கூறுதல் ஒரு சிறிதும் அடாதென்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/83&oldid=515361" இலிருந்து மீள்விக்கப்பட்டது