பக்கம்:திருவருட் பயன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



72

'அருக்கன் என' என்றதனால், அவ்வாறு காரணமாதல் ஒருவாற் செய்து கொள்ளப்பட்டதல்லவாம். பொதுப்பட 'வினை' என்றதனால், புண்ணிய பாவம் இரண்டுமாம். சூரியனைப்போல ஒரிடத்து உண்டாய காலை ஒரிடத்து இன்றாயிருப்பது இல்லை என்பார், எங்கும் என்று அருளிச் செய்தார்.

இதனால் அருள் காரணமாதல் கூறப்பட்டது.

விளக்கம் : வினைபெருக்க, வினைநுகர, என வினை என்பது ஈரிடத்தும் சென்றியைந்தது. வினை - புண்ணிய பாவம் ஆகிய இருவினைகள். பெருக்குதல் ஆன்மாக்கள் இருவினைகளைச் செய்து ஈட்டுதல். நுகர்தல்-செய்த வினைப்பயன்ககளாகிய இன்பதுன்பங்களை அநுபவித்தல். அருக்கன் - சூரியன். என-உவமவுருபு, அருக்கன் என, அருள் (ஆன்மாக்கள்) வினைபெருக்க, வினைநுகர, பேரொளியாய் எங்கும் நிற்கும் என இயைத்துரைக்க.

மக்கள் தொழில்செய்து பொருள்களை ஈட்டவும் ஈட்டிய பொருள்களை நுகரவும் துணையாய்நின்று இருள் நீக்கி ஒளி வழங்கும் கதிரவனைப்போன்று, திருவருளும் உயிர்கள் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்தற்கும் செய்த வினைப்பயன்களை நுகர்தற்கும் பேரொளியாய்த் துணைசெய்து எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து நிற்கும் என்பதாம். உயிர்கட்கு அருள் துணைசெய்ய வேண்டுமோ? உயிர்கள் தாமே அறிந்து வினைசெய்து பயன்களை நுகரும் எனக் கொண்டால் வரும் குற்றம் யாது? என வினவிய மாணாக்கர்க்கு அருளின் உதவி இன்றியமையாதென்பதனை அறிவுறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/95&oldid=515395" இலிருந்து மீள்விக்கப்பட்டது