பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவமுடைமை

ற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

இ-ள்:- உற்ற நோய் நோன்றல்- (தமக்கு) உற்ற நோயைப் பொறுத்தலும், உயிர்க்கு உறு கண் செய்யாமை அற்றே- பிற வுயிருக்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே, தவத்திற்கு உரு-தவத்திற்கு வடிவாம்.

இது, தவம் இன்னதென்று கூறிற்று. ௨௭௪.

ன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்.

இ-ள்:- தன் உயிர் தான் அற பெற்றானை-தன் உயிரானது தானென்று கருதும் கருத்து அறப் பெற்றவனை, ஏனைய மன் உயிரெல்லாம் தொழும்- ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்.

உயிரென்றது சலிப்பற்ற அறிவை. தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை. தான் அறுதலாவது அகங்காரம் நீங்குதல்.

இது, தான் அறப் பெற்றான் தெய்வம் ஆவா னென்றது. ௨௭௫.

சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

இ-ள்:- சுட சுட (ஒளி விடும்) பொன் போல்-நெருப்பின் கண்ணே இட இட (த் தன்னோடு கலந்த மாசு அற்று) ஒளி விடுகின்ற பொன்னைப் போல, துன்பம் கட சுட நோற்கிற்பவர்க்கு ஒளி விடும்-துன்பம் நலிய நலியத் தவம் செய்வார்க்கு (த்தம்மொடு மருவின வினை விட்டு) ஒளி விடும்.

இது, தவம் செய்வாரது வினை நீங்கி ஒளி உண்டா மென்றது. ௨௭௬.

௯௯