பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயனில சொல்லாமை

இது , பயனில்சொல் பாராட்டுதல் மக்கட் பண்பில்லை யென்றது. ௩௨௭.

ரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

இ-ள்:- அரும்பயன் ஆயும் அறிவினார்-அரிய பொருளை ஆராயும் அறிவினையுடையார், பெரும் பயன் இல்லாத சொல் சொல்லார்-பெரிய பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

[அரிய பொருள்-உணர்தற்கு அரிய பொருள்; அதாவது மெய்ப்பொருள்.]

இது, பயனில் சொல் மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனை அறிவுடையார் சொல்லா ரென்றது. ௩௨௮.

பொருடீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.

இ-ள்:- பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்-பொருள் இல்லாத சொல்லை மறந்தும் சொல்லார், மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்- மயக்கம் தீர்ந்த குற்றம் அற்ற தெளிவினையுடையார்.

[பொருள்-பயன். தீர்தல்-நீக்குதல்.]

இது, தெளிவுடையார் பயனில கூறா ரென்றது. ௩௨௯.

யனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

இ-ள்:- சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக-சான்றோர் நயன் இல்லாதவற்றைச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று-பயன் இல்லாதவற்றைச் சொல்லாமை நன்று.

௧௧௯