பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலையாமை

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று.

இ-ள்:- கூத்தாட்டு அவைக்குழாம் அற்று பெருஞ் செல்வம்-கூத்தாட்டு (க்காண்டற்கு) அவைக்கூட்டம் (திரண்டால்) போலும் பெருஞ் செல்வம் (திரளுமாறு); அது விளிந்தால் அற்று போக்கும்-அந்த அவை எழுந்து போனால் போலும் அது போமாறும்.

[அவை-சபை. அத்து சாரியை. திரண்டால் என்பதும் திருளுமாறு என்பதும் எச்சமாக வருவிக்கப்பட்டன. விளிந்தால் என்பது ஆல் கெட்டு நின்றது. ஏகாரம் அசை.]

இது, செல்வத்தின் வரத்தும் போக்கும் ஒரு பொழுதிலே நிகழு மென்றது. ௩௩௩.

நாளென்ப தொன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

இ-ள்:- நாள் என்பது ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாள்-நாள் என்பது (இன்பம் தருவதாகிய) ஒன்று போலக் காட்டி உயிரை ஈருகின்ற ஒரு வாளாம், அஃது உணர்வார் பெறின்-அதனை அறிவாரைப் பெறின்.

[அஃது என்பது ஆய்தம் கெட்டு நின்றது. அதனை அறிவாரைப் பெறின்-அதன் உண்மைத் தன்மையை அறிவார் உண்டாயின்.]

இஃது, "உயிரீரும்" என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று. ௩௩௪.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

இ-ள்:- நா செற்று விக்குள் மேல் வாராமுன்-நா (வழங்காமல்) செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்

௧௨௧

16