பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வான் சிறப்பு

னவல்ல எண்குணத்தான் தாளை-எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலை-வணங்காத தலை யினையுடைய உடம்புகள், [வணங்காத என்பது ஈறு கேட்டு நின்றது.]

அவை உயிருண்டாகில் வணங்கும். அவை வணங்காமையால் அவற்றை இழித்து உடம்புக ளென்றார்.

இது, வணங்காத உடம்புகள் பிணங்க ளென்றது. ௧0.

உ-வது.-- வான் சிறப்பு.

வான் சிறப்பாவது மழையினது தலைமை. இது கடவுட்செய்கைத் தாதலான், அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈண்டுக் கூறியது என்னை யெனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும் இனிது நடப்பது மழையுண்டாயின் என்றற்குப் போலும். அன்றியும், வானத்தின் பொருட்டு வணக்கம் கூறினா ரெனினும் அமையும்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல், வானோர்க்கும் ஈண்டு.

இ-ள்:- வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது- தேவர்க்கும் இங்குச் சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் வறக்குமேல் - வானம் புலருமாகில்.

மழை பெய்யாக்கால் வரும் குற்றம் கூறுவார், முற்பட (நால்வகைப்பட்ட அறங்களில்) பூசை கெடு மென்றார். ௧௧.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்,
வானம் வழங்கா தெனின்,

இ-ள்:- வியன் உலகம் - அகன்ற உலகத்துக்கண், தானம் தவம் இரண்டும் தங்கா - தானமும் தவமு மாகிய இரண்டறங்களும் உளவாகா, வானம் வழங்காதெனின் - மழை பெய்யா தாயின்.

இது, தானமும் தவமும் கெடு மென்றது. ௧௨.