பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யுணர்தல்

இ-ள்:- ஈண்டு மெய்ப்பொருள் கற்று கண்டார்-இவ்விடத்தே மெய்ப் பொருளை அறிந்து தெளிந்தாரே, மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் -மீண்டு இவ்விடத்து வாராத வழியினை அடைவர்.

[கண்டாரே என்பது ஏகாரம் கெட்டு நின்றது.]

இது, கல்வியால் அறிவை அறியப் பிறப்பு அறு மென்றது. [அறிவு-மெய்ப்பொருள்.] ௩௫௮.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

இ-ள்:- சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின்-(தன்னைச்) சார்வனவற்றை அறிந்து அவற்றின் சார்வு கெட ஒழுகுவனாயின், மற்று அழித்து சார்தரா சார் தரும் நோய்-அவ்வொழுக்கத்தினை அழித்துச் சார்தலைச் செய்யா சாரக்கடவ துன்பங்கள்.

சார்வு கெட ஒழுகல்-வினைச்சார்வு கெட ஒழுகல். அஃதாவது, காமம் வெகுளி மயக்கம் இன்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல்.

இஃது, உண்மையைக் கண்ட அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போ மென்றது. ௩௫௯.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

இ-ள்:- காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட-ஆசையும் வெகுளியும் மயக்கமும் என்னும் இவை மூன்றினது நாமம் போக, நோய் கெடும்-வினை போம்.

வினை கெடுதற்கு வழி இதுவென்று கூறினார். ௩௬0.

௧௩௧