பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழ்

பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

இ-ள்:- இழவு ஊழ் பேதை படுக்கும்-கெடுக்கும் ஊழ் (தோன்றினால்) அறியாமையை உண்டாக்கும்; ஆகல் ஊழ் உற்றக் கடை அறிவு அகற்றும் -ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.

இஃது, அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது. ௩௭௨.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்.

இ-ள்:- நுண்ணிய நூல் பல கற்பினும்-(ஒருவன்) நுண்ணிதாக ஆராய்ந்த நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை யறிவே மிகும்-பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். "அஃது எற்றுக்கு, கல்வியன்றே காரணமாம்?" என்றார்க்குக் கல்வியுண்டாகினும் ஊழானாகிய அறிவு வலியுடைத்தென்று இது கூறிற்று. ௩௭௩.

ழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

இ-ள்:- ஊழின் பெருவலி யா உள-ஊழினும் மிக்க வலியுடையன யாவை உள? மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும்-பிறிது ஒன்றை ஆராயும் காலத்தும் தான் முற்பட (ஆராய்ச்சிக்கு உடன்பட்டு) நிற்கும்.

௧௩௭