பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இ-ள்:- நிறை மொழி மாந்தர் பெருமை - நிரம்பிய கல்வியையுடைய மாந்தரது பெருமையை, நிலத்து மறை மொழி காட்டி விடும் - அவரால் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.

இஃது, அவரால் நடக்கு மென்று கூறிற்று. ௨௭.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

இ-ள்:- குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வரும் தீமையை, கணமேயும் காத்தல் அரிது - சிறிது பொழுதாயினும் வாராமல் காத்தல் அரிது,

அவர் சாபத்தால் நகுடன் பாம்பாயினான்.

இஃது, அவர் வெகுளியைப் பொறுத்தல் அரிதென்று கூறிற்று. ௨௮.

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

இ-ள்:- செயற்கு அரிய செய்வார் பெரியார் - செய்தற்கு அரியனவற்றைச் செய்வார் பெரியோ ரென்று சொல்லப்படுவார், செயற்கு அரிய செய்கலா தார் சிறியர் - அவற்றைச் செய்யமாட்டாதார் (துறந்தாராயினும்) சிறியோரென்று சொல்லப்படுவர்.

செயற்கரியன, இயமம் நியமம் முதலாயின.

இவ்வதிகாரம் "நீத்தார் பெருமை" என்னப்பட்டதாயினும், நீத்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார், செயற்கு அரியனவற்றைச் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவர்

௧௧