பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

என்று இது கூறிற்று, ௨௯.

ந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இ-ள்:- அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்போரும் துறந்தோராகக் கொள்ளப்படுவர், எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - அவர் எல்லா உயிர்க்கும் செவ்விய தட்பம் செய்தலை மேற்கொண்டு ஒழுகலானே. (மற்று - அசை.]

மேல், துறந்தவர்களினும் சிறியார் உளரென்று கூறினார். ஈண்டு, துறவாதாரினும் பெரியார் உளரென்று கூறினார். இவை எட்டானும் துறந்தார் பெருமை கூறப்பட்டது. ௩0.

௪-வது. - அறன் வலி யுறுத்தல்.

அறன் வலியுறுத்தலாவது, அறம் வலிமையுடைத் தென்பதனை அறிவித்தல். இதனானே அறத்துப்பாலை முன்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது, மேற்கூறிய முனிவரால் கொண்டுய்ககப்படுதலின் பின் கூறப்பட்டது.

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்
காக்கம் எவனோ உயிர்க்கு?

இ-ள்:- சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் - முத்தியும் தரும் செல்வமும் தருமாதலால், அறத்தின் ஊங்கு உயிர்க்கு ஆக்கம் எவன் - அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கம் தருவது யாது? [ஓ -அசை.]

பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறனே அதனை உண்டாக்கும் வலியுடைத்தென்று இறு கூறிற்று. ௩௧

ல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.

௧௨