பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்வாழ்க்கை

இ-ள்:- இல் வாழ்வான் என்பான் - இல்வாழ்வான் என்று சொல்லப்படுமவன், இயல்புடைய மூவர்க்கும் - இயல்புடைய மூவர்க்கும், நல் ஆற்றில் நின்ற துணை. - நல்ல வழியின் கண்ணே நின்ற (ஒரு) துணை.

தானமாகிய இல்லறத்தைச் செய்யுமவன், தவத்தின் பாற்பட்ட விரதத்தை மேற்கொண்டு ஒழுகாநின்ற பிரம்மசாரிக்கும், தவத்தினை மேற்கொண்டு ஒழுகாநின்ற வானப்பிரத்த சங்நியாசிகளுக்கும், தத்தம் நிலை குலையாமல் உணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின், அவர்க்கு நல்லுலகின் கண் செல்லும் நெறியிலே நின்ற ஒரு துணையென்று கூறினர். துணையென்ப, இடையூறு வாராமல் உய்த்துவிடுவாரை.

இது, மற்றைய மூன்று ஆசிரமிகளுக்கும் இல்வாழ்வான் துணை யென்றது. ௪௧.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

இ-ள்:- துறந்தார்க்கும் - (வருண நாமங்களைத்) துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் - துறவாது நல்குரவாளராய் உண்ணப் பெறாதார்க்கும், இறந்தார்க்கும் - (பிறராய் வந்து) செத்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை - இல்வாழ்வான் என்று சொல்லப் படுமவனே துணையாவான்.

மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையால் அவரை "இயல்புடைய மூவர்" என்றும், ஈண்டுக் கூறிய இவர் அவற்றைத் துறந்தமையால் இவரைத் "துறந்தா"ரென்றும் கூறினர். செத்தார்க்கு இவன் வேண்டிய வனாயினான், அவரைப் புறங்காட்டுய்த்தல் முதலியன செய்யவேண்டுதலின்.

இது, மேற்கூறியவர்களே யன்றி இவர்களுக்கும் இல்வாழ்வான் துணையென்று கூறிற்று. ௪௨.

௧௭

3