பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

னும், ஞாலத்தின் மாணப் பெரிது - உலகத்தினும் மிகப்பெரிதாம். [காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம்.]

இஃது, உதவிவேண்டும் காலத்தில் செய்த உதவி மிகப்பெரி தென்றது. ௧0௫.

தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

இ-ள்:- தினைத்துணை நன்றி செயினும் - தினையளவு நன்றி செய்தாராயினும், பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் - (அதனை அவ்வளவிற்றென்று நினையாது) பனையின் அளவினதாகக் கொள்வர் (உதவியின்) பயனை அறிவார்.

[தினையளவு, பனையளவு என்பன முறையே சிறிய அளவையும் பெரிய அளவையும் குறித்து நின்றன.]

செயல்வகையால் சிறிதாயினும், நன்றி பயன்வகையால் பெரிதா மென்றது இது. ௧0௬.

ழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

இ-ள்:- தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம் கண் (உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - (அப்பிறப்பிலே யன்றி) எழுமையிலும் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் (சான்றோர்).

[எழுமை - ஏழ்முறை. எழு என்றும் வினைத்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றது.]

இது, தமக்கு நன்றி செய்தார் நட்பினை எஞ்ஞான்றும் மறக்க லாகா தென்றது. ௧0௭.

தவி வரைத்தன் றுதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

௪0