பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்ந்நன்றி யறிதல்

இ-ள்:- உதவி வரைத்து அன்று உதவி - (முன்பு செய்யப் பெற்ற) உதவியின் அளவின தன்று (பின்பு செய்யும்) மாற்றுதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - (முன்பு) உதவி செய்யப் பெற்றவர் நன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று (அது).

இது, மாற்றுதவிக்கு அளவில்லை யென்றது. ௧0௮.

கொன்றன்ன இன்னா செயினும், அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

இ-ள்:- கொன்றால் அன்ன இன்னா செயினும்-(தமக்கு முன்பு நன்மை செய்தார்) தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு) செய்யினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ள கெடும் -அவர் முன்பு செய்த நன்றி ஒன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாம் கெடும்.

[இன்னாமை - தீமை. கொன்றால் என்பது - 'ஆல்' கெட்டு நின்றது.]

இது, முன் தமக்கு உபகாரம் செய்தவர் பின் தமக்கு அபகாரம் செய்யின், அவ் வபகாரமெல்லாம் முன்செய்த உபகாரத்திற்கு ஈடாகா வென்பது, ௧0௯.

ந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இ-ள்:- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - எல்லா நன்மைகளையும் சிதைத்தார்க்கும் (பின்பு ஒருகாலத்தேயாயினும்) உய்தல் உண்டாம்; உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு- (ஒரு காலத்தினும்) உய்தல் இல்லை ஒருவர் செய்த நன்றியைக் கொன்ற மகனுக்கு, [கொன்ற - சிதைத்த.]

இது, செய்ந்நன்றி கொன்ற பாவம் அநுபவித்தல்லது பிராயச்சித்தத்தால் தீரா தென்றது. ௧௧0.

௪௧

6