பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

கெடுவாக வையா துலகம், நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

இ-ள்:- நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நன்மையின் கண்ணே நின்றவன் (அதுகாரணமாகப் பொருட் கேட்டை அடைவானாயின், அப்) பொருட் கேட்டை, உலகம் கெடுவாக வையாது - உலகத்தார் கேடாகச் சொல்லார். (ஆக்கத்தோடே எண்ணுவர்.)

நடுவுநிலைமை யுடையான் கேடுற்றால் அதனைக் கேடாகக் கருதார் உலகத்தார் என்று இது கூறிற்று. ௧௧௬.

ன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

இ-ள்:- நன்றே தரினும் - பெருமையே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை - நடுவுநிலைமையை நீங்கிவரும் ஆக்கத்தை, அன்றே ஒழிய விடல் - (அது வருவதற்குத் தொடக்கமான) அன்றே ஒழிய விடுக.

இது, நடுவு நிலைமையை விடுதலால் வரும் பொருள் பெருமை தரா தென்றது. ௧௧௭.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

இ-ள்:- தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - தன் நெஞ்சு நடுவு நிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின், யான் கெடுவல் என்பது அறிக - (அஃது ஏதுவாக) 'யான் கேடுறுவேன்' என்பதனை (ஒருவன்) அறிக.

இது, மனம் நடுவு நிலைமையை விட்டு நீங்குமாயின், அது தனது கேட்டிற்கு முதற்குறி யென்றது. ௧௧௮.

௪௪