பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறையுடைமை

க்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இ-ள்:- தக்கார் தகவிலார் என்பது - செவ்வை யுடையார் செவ்வையிலார் என்பது, அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவர் மக்களானே காணப்படும்.

இது, தக்கார் தகவிலார் என்னும் பெயர் தம்மளவிலே நிற்பதன்றியும் தம்மக்களையும் விடா தென்றது. ௧௧௯.

செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

இ-ள்:- செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையுடையவனது செல்வம், சிதைவு இன்றி - (தன்னளவிலும்) கேடின்றியே நின்று, எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - தன் வழியுள்ளார்க்கும் (கேடுவராமல் காக்கும்) காவலதனை யுடைத்து. [எச்சத்திற்கும் என்பது உம்மை கெட்டு நின்றது.]

இது, நடுவு நிலைமை யுடையார் செல்வம் அழியா தென்றது. ௧௨0.

௧௩-வது.-பொறை யுடைமை.

பொறையுடைமையாவது, தமக்குத் துன்பம் செய்தார் (க்குத் தாமும் துன்பம் செய்யாது அவர்) மாட்டுச் சென்ற வெருளியை மீட்டல், [நடுவு நிலைமையை விடாது ஒழுகுதற்குப் பொறையுடைமை இன்றியமையாத தொன்றாதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.]

பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை
மறத்தல் அதனினும் நன்று.

இ-ள்:- இறப்பினை என்றும் பொறுத்தல் (நன்று) - (பிறர் செய்த) மிகையினை என்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அதனினும் நன்று - மிகையினை மறத்தல் பொறையிலும் நன்று.

௪௫