பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

[மிகை - பிழை. நன்று என்பது முன்னரும் கூட்டி யுரைக்கப்பட்டது.]

பிறர் செய்த மிகையினைப் பொறுத்தல் நன்றென்பதூஉம், அதனை மறத்தல் அதனினும் சிறந்த நன்றென்பதூஉம் இது கூறிற்று. ௧௨௧.

திறனல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

இ-ள்:- திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும், நோ நொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - (தகுதியல்லா தவற்றைத் தானும் செய்தால் அவர்க்கு உளதாம்) நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. [நோ - துன்பம். நொந்து - வருந்தி.]

இது, தனக்குப் பிறர் தீங்கு செய்யினும் தான் அவர்க்குத் தீங்கு செய்யலாகா தென்றது. ௧௨௨.

நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

இ-ள்:- நிறையுடைமை நீங்காமை வேண்டின் - (தன்னினின்று) நிறையுடைமை நீங்காதிருத்தல் வேண்டுவனாயின், பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - (தான்) பொறையுடைமையைப் பாதுகாத்து ஒழுகவேண்டும்.

நிறை யென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். [படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது.]

இது, பொறையுடைமையால் நிறையுடைமை நிலைபெறு மென்றது. ௧௨௩.

கழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

௪௬