பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இது, பிறனில் விழையான் ஓர் அறனும் செய்தில னாயினும், பல நன்மைகளை அடைவா னென்றது. ௧௫0.

௧௬-வது.—வெகுளாமை.

வெகுளாமையவது, வெகுளுதற்குக் காரணமுள்ள இடத்தும் வெகுளாராதல், [வெகுளுதற்கு காரணமான பிறனில் விழைதலைச் செய்தார் மாட்டும் வெகுளுதல் ஆகாதென்றற்கு இது பிறனில் விழையாமையின் பின் கூறப்பட்டது.]

றத்தல் வெகுளியை யார்மாட்டும், தீய
பிறத்தல் அதனான் வரும்.

இ-ள்:- யார்மாட்டும் வெகுளியை மறத்தல் - யார்மாட்டும் வெகுளியைச் செய்தலை மறக்க, தீய பிறத்தல் அதனான் வரும்-தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வரு மாதலான்.

[தீயன - தீவினைகளும் அவற்றின் பயனாகிய துன்பங்களும், பிறத்தல் - உண்டாதல்.]

இது, வெகுளாமை வேண்டு மென்றது. ௧௫௧.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்?

இ-ள்:- செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் - இயலும் இடத்தில் தனது வெகுளியைக் காப்பவனே வெகுளியைக் காப்பவன் ஆவன்; அல் இடத்து காக்கில் என் காவாக்கால் என் - இயலாத இடத்தில் அதனைத் தவிர்ந்ததினால் (தனக்கு உண்டாகும் பெருமை) யாது? தவிராததினால் (வெகுளப்பட்டார்க்கு உண்டாகும் சிறுமை) யாது?

[இயலும் இடம் - (வெகுளி) செல்லும் இடம்-வெகுளி சென்று வருத்தக்கூடிய இடம்.]

இது, வலியவன் வெகுளாமை வேண்டு மென்றது. ௧௫௨.

௫௬