பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னா செய்யாமை

றிவினான் ஆகுவ துண்டோ பிறிதுநோய்
தன்னோய்போல் போற்றாக் கடை.

இ-ள்:- பிறிதுநோய் தன்னோய் போல் போற்றாக் கடை-பிறிதோர் உயிர்க்கு உறும் நோயைத் தனக்குறு நோய்போலக் காவாத இடத்து, அறிவி னான் ஆகுவது உண்டோ- அறிவுடையனாகிய அதனால் ஆகுவது உண்டோ? (இல்லை).

[ஆகுவது - ஆகும் பயன்.]

இஃது, அறிவுடையார் இன்னா செய்யா ரென்றது. ௧௬௬.

ன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

இ - ள் :- தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்-தன் உயிர்க்கு உள்ள இன்னாமையை (உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றி)த் தான் அறியுமவன், மன் உயிர்க்கு இன்னா செயல் என்னோ-(பின்னை) நிலையுள்ள (பிற) உயிர்களுக்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதனைக் கருதியோ?

[கொல் என்பது அசை.]

இஃது, இன்னா செய்கின்றவர் அறிவிலா ரென்றது. ௧௬௭.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.

இ - ள் :- பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்-பிறருக்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், பின்பகல் தானே தமக்கு இன்னா வரும்-பிற்பொழுது தானே தமக்கு இன்னாத வரும்.

இன்னா செய்ததினால் வரும் குற்றம் என்னை என்றார்க்கு, இது கூறப்பட்டது. ௧௬௮.

௬௧