பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

[விடல் என்று கூறினார், விடுதற்குக் காரணமாகிய அறிவினை. செய்யாது என்பது ஈறு கெட்டுநின்றது.]

இது, தீவினையைச் செய்யாத அறிவு எல்லாவற்றுள்ளும் தலைமையுடைத் தென்றது. ௨௧0.

௨௨-வது.-ஒப்புரவறிதல்.

ஒப்புரவறிதலாவது, இல்லையென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லாரெனினும், தன் அளவிற்கும் தன் வருவாய்க்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல். [ஒப்புரவு செய்யாமையும் தீவினையின்பால் படுமாதலால் இவ்வதிகாரம் தீவினையச்சத்தின் பின் கூறப்பட்டது.]

தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு,

இ-ள்:- தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம்-ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு-தகுதியுடையார்க்கு உபகாரம் செய்தற்காக.

இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்க வென்றது. ௨௧௧.

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்
டென்னாற்றும் கொல்லோ உலகு.

இ-ள்:- கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஒப்புரவு (செய்யுங்கால்) கைம்மாது (கருதிச்) செய்யவேண்டா; மாரிமாட்டு உலகு என் ஆற்றுமோ-(எல்லார்க்கும் நல்மழை சுரக்கின்ற) மாரிக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யுமோ?

கடப்பாடு - ஒப்புரவு. [கொல் என்பது அசை.]

ஒப்புரவாவது கைம்மாறு கருதாத கொடை என்று இது கூறிற்று. ௨௧௨.

௭௬