பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-(முற்பிறப்பின் கண்) அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்து ஒழுகினவர், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர்-(இப்பிறப்பின் கண்) பொருளினின்று நீங்கி மறவியும் உடையவர் என்று சொல்லுவர் (ஆன்றோர்).

இஃது, அருள் இல்லா தார்க்குப் பொருள் இல்லையா மென்றது. ௨௪௮.

பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார்
அற்றார்; மற்றாதல் அரிது.

இ-ள்:- பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-பொருள் இல்லாதார் ஒரு காலத்தே பொருளுடையராகவும் கூடும்; அருள் அற்றார் அற்றார்-அருள் இல்லாதார் கெட்டார்; மற்று ஆதல் அரிது-பின்பு (ஒரு காலத்தும்) ஆக்கமுடையவராதல் இல்லை.

இஃது, அருளில்லார்க்குப் பொருளின்மையேயன்றி எல்லாக் கேடும் உண்டா மென்றது. ௨௪௯.

லியார்முன் தம்மை நினைக்க,தாம் தம்மின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

இ-ள்:- தாம் தம்மின் மெலியார்மேல் செல்லும் இடத்து-தாம் தம்மின் மெலியார் மேல் வெகுண்டெழும் இடத்து, வலியார் முன் தம்மை நினைக்க-வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

இஃது, அருள் உண்டாகும் ஆறு கூறிற்று. ௨௫0.

௨௬-வது.-இனியவை கூறல்.

இனியவை கூறலானது, கேட்டார் மனம் மகிழும் சொற்களைக் கூறுதல். [இஃது, அருளுடையாரிடத்து நிகழ்வ தொன்றாதலின், அருளுடைமையின் பின் கூறப்பட்டது.]

௯0