பக்கம்:திருவாசகத்தேன்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 93


மாலை ஓங்கார பிரணவ வடிவமாயுள்ளது. ஓங்காரம் வேதம் முதல் அனைத்துக் கலைகளுக்கும் முதலாகும். ஓங்காரத்தின் பொருள் சொல்லத் தெரியாமல் நான்முகன் வாங்கிய குட்டை, நினைவில் கொள்வது நல்லது. இந்த உலகத்தின் முதல் ஒலி 'ஓம்’! இந்த உலகத்தின் முதல் எழுத்து 'ஓம்'! இறைவனே ஓங்கார வடிவினன். சிவலிங்கத் திருமேனியில் பீடம் (ஆவுடை) விந்து, இலிங்கம் நாதம் என்று சாத்திரம் கூறும். நாம் ஏதாவது எழுதத் தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுகிறோம். அதுவும் ஓங்காரம்தான். விந்து பக்கத்தில் நாதவடிகை இட்டு எழுதுதல் பிள்ளையார் சுழி. அ+ உ+ ம்= ஓம் ஆயிற்று. இறைவா, சிவனே! ஆன்மாக்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவனே நீதானே! பிள்ளையார் சுழி போட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்த இறைவன் அந்த பயணத்தை இனிதே முடித்து வைக்க வேண்டாமா? காத்தருள வேண்டாமா? 'ஒம்' என்றால் காப்பவன் என்பது பொருள் அல்லவா? என்றெல்லாம் வினாக்க்ள் எழுகின்றன, இறைவனுடைய கொன்றை மாலையைச் சிந்திக்கும் பொழுது!

இறைவன் தனக்குவமை இல்லாதவன். தமிழ் மறையும் 'தனக்குவமை இல்லாதான்' என்று கடவுளைப் போற்றுகிறது. அப்பரடிகள் "உவமன் இலி" என்றார். நபிகள் நாயகமும் 'கடவுளுக்கு உவமையாக—— ஈடாக எதையும் கூறக்கூடாது" என்றார். ஆம், கடவுளே தனக்குவமை யில்லாதவன். கடவுளுக்குத்தான் பிறப்பில்லை; இறப்பில்லை; வேண்டுதல் இல்லை; வேண்டாமை இல்லை; எல்லைகள் இல்லை. ஆதலால், கடவுள் தனக்குவமை இல்லாதவன். தனக்குவமை இல்லாதவனாக இருப்பதனால் என்னை எடுத்தாளுதல் எளிது. சிவன் எம்பிரான் தனக்குவமையில்லாதவனானாலும் மேருவை வில்லாகக் கொண்டவன். ஆயினும் எனக்கு எளியவன்; தண்ணளியிற் சிறந்தவன். தாமரைக்