பக்கம்:திருவாசகத்தேன்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 103

ஆம்! அது உண்மை! ஆயினும் பின்னைப் புதுமைக்கும் பற்றுக்கோடாக விளங்கி அருளுகின்றான்! புதிய புதிய கணக்கிலாத கோலங்காட்டிக் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்; ஆட்கொண்டருள் செய்கின்றான். இன்றையப் புதுமை மட்டுமல்ல. இனி எதிர் வருங்காலத்தும் புதுமையாகவும் இறைவன்—— சிவன் விளங்குவான். இது உண்மை எது நாளும் புதுமை நலம் பெறுகிறதோ அது அழிவற்றது; ஆக்கம் தருவது. இறைவன்—— சிவன் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்புதுமையாகவே விளங்குகின்றான்.

கடவுள் நம்பிக்கை மனித குலத்தில் கால்கொண்டு கிடக்கிறது. ஆனால் கடவுள் இல்க்கணங்களில் எண்ணற்ற வேறுபாடுகள்! நாம்—— ஆன்மாக்கள் கடவுளைத் தேடுவது ஏன்? வழிபடுவது ஏன்? காணாதனவற்றைக் காணவேண்டும். கேளாதனவற்றைக் கேட்க வேண்டும். என்றும் மாறாத்துணையாக அடைய வேண்டும். நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாத தலைவனாக இருத்தல் வேண்டும். பிழையெலாம் தவிரப் பணித்து ஆட்கொள்ள வேண்டும். என்றும் இன்பம் பெருகும் இயல்பினை வழங்கியருளுதல் வேண்டும். இத்தகு நலன்களைப் பெறுவதற்கு பரம்பொருளைத் தலைவனாகப் பெறுதல் தகுதி மிகுதியும் உடையது. தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மிக்க சிக்கலான பணி! நாற்காலி ஆசை தேவர்களுக்கும் உண்டு வேள்வியில் சொரியும் அவிப்பொருளை உரிமையில்லாத நிலையிலும் தேடித் தின்பவர்கள் தேவர்கள். இந்தத் தேவர்களுக்கு அம்மம்ம, எத்தனை எத்தனை ஆசாபாசங்கள் தேவர்களுக்கு நெறியும் இல்லை! முறையும் இல்லை! அவரவர் மனம் கொண்டதே மாளிகை. அதனால் திருக்குறள் "தேவரனையர் கயவர்” என்று திட்டித் தீர்த்துவிடுகிறது. கயவர்கள் இலக்கணம் என்ன? அவர் அவர் நலத்திற்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்வர். நிர்வாணமான சுயநலவாதிகள். இவர்கள் கொலையிற் கொடியர்.