பக்கம்:திருவாசகத்தேன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பசிக்கு உணவு உடலுக்கு வேலை. இது தத்துவம்; கொள்கை; கோட்பாடு.

சிவன், பெண் சுமந்த பாகத்தன். அதனால் அருளுதல் இயல்பாக உடையவன். ஏழைப் பிட்டு வாணிச்சியின் துயர் நீக்க உதிர்ந்த பிட்டையே கூலியாகக் கொண்டு மதுரை வைகையாற்று உடைப்பை அடைக்க மண் சுமந்தான். மன்னனின் கோலால் மொத்துண்டான்; திருமேனியில் வடுத்தாங்கினான்; புண்பட்டான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பண் சுமந்த பாடல்களைப் பெற்றுள்ள பெருமை தமிழுக்கு உண்டு. இனிமை பயக்கும் இசையையே தமிழிலக்கியங்கள் பண் என்று பாராட்டுகின்றன. தமிழ் மக்கள் பண்களைக் கண்டதோடன்றி அப்பண்களைப் பாடும் பருவ காலங்களையும் வரையறுத்திருந்தனர். பரிபாடல், சிலப்பதிகாரம் முதலியன மூலம் சங்க காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பண்கள் இருந்தனவாகத் தெரிகிறது. ஆனால் பெரும் பண் நான்கு என்பது மரபு வழி வந்த கருந்து. அவை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி (நெய்தல்) என்பன. தேவாரத் திருமுறைகள் பண்ணமைவு முறையில் அமைந்தவை. தேவாரத் திருமுறைகளில் இருபத்து மூன்று பண்கள் மட்டுமே அமைந்துள்ளன. திருவாசகம் இயற்றமிழ் போல யாப்பமைவில் தோன்றினாலும் திருவாசகத் திருவம்மானையை சீகாமரத்தில் பாடலாம். சீகாமரப்பண் காலைய் பொழுதில் பாட வேண்டிய பண். அதனாலேயே மாணிக்கவாசகர் 'பண் சுமந்த பாடல்’ என்று பாடுகின்றார்.

சிவன் தமிழோடு இசைப் பாடல்கள் கேட்பதில் இச்சை மிகுதியும் உடையவன். நாள்தோறும் காசுகள் தந்து தமிழோடிசை கேட்டின்புறும் இயல்பினன். மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் பண் சுமந்த