பக்கம்:திருவாசகத்தேன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 119

அறியாம்ல் திகைத்து நிற்கின்றேன்! இறைவா! இனியும் பொறுக்க இயலாது! விடைப்பாகா, உழுத பயனை ஊரவர் உண்டு மகிழ, வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கிடையை வாகனமாக உடையவனே! உன்னைப் பிரிந்து இனிது இருக்க ஒருப்படேன்! அதனால், இறக்கவும் மாட்டேன்.

இறக்காமையால் தானே மீண்டும் மீண்டும் அல்லல்! இறைவா, உடலை நீங்காது வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றினை அப்புறம் ஏன் துன்பங்களைத் தந்து ஒறுத்திடுகின்றாய்! இறைவா நீ, என் உடலை ஒறுத்திடுதல் நன்றோ! நான் உய்வதற்கு என்னை ஒறுத்திடுதல் மட்டும் போதுமா? ஒறுத்தலினால் விளைவது துன்பமே ஆதலால் இறைவா! என்னை ஒருத்தது போதும்! இனிமேலும் ஒறுத்து வருத்தந் தரவேண்டாம்! என்னைப் பணிகொள்! உடல் பணிகளில் ஈடுபட்டால் வினை நீங்கும். துன்பங்கள் தொடரா இறைவா, நீ எனக்கு உடல் தந்தருளியதே, பணி செய்யத்தானே! கண்கள் இயல்பாகப் பிறரையே பார்க்க உதவுகின்றன. இதன் அமைப்பு விதி என்ன? பிறர் நலம் காண முயலுக, பிறரொடு உறவு கொள்க என்பதுதானே! உடற்பொறிகள் அனைத்தின் அமைப்பும் பிறர் நலம் கருதியதாகத்தான் அமைந்துள்ளன. ஆதலால், என்னைப் பணிகொள்! பணி செய்தால் பொறி புலன்கள் அன்பில் தோயும்! எல்லோரிடமும் பணிந்து பணி செய்வதால் தாழ்வெனும் தகைமை வந்து பொருந்துகிறது.

ஆன்மாக்களின் உய்தியையே குறிக்கோளாகக் கொண்ட தலைவனே! தனக்குவமை இல்லாத தலைவனே! நான் என்ன செய்வேன்? இறைவா, நீயே பணித்தருள்! 'இது செய்க!' என்று பணித்தருள்! உன் விருப்பமே என் விருப்பம்! பணித்த வண்ணம் செய்வேன். காலந் தாழ்த்தாது அருள் செய்க! காலம் தாழ்த்திடின் செத்துப்