பக்கம்:திருவாசகத்தேன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கண்ணிற்கு மை, இளம் பெண்கள் தான் இட்டுக் கொள்வர். ஆதலால், உமாதேவியை "மையிலங்கு நற்கண்ணி" என்றார். "மையிலங்கு" என்ற சொற்றொடருடன் "நற்கண்ணி" என்றது அம்மையின் மையிட்ட கண் காமக் கவர்ச்சியுடையதல்ல என்றும் அது நலம் பயப்பது, இன்பம் தந்தருளி இறவாத அன்பு நெறியில் உய்த்துச் செலுத்துவது என்றும் பொருள்படும்.

கருணை- உதவுதல் என்பது கேட்டுச் செய்வதல்ல. தாமே எளிவந்து செய்வது. மாணிக்கவாசகர், இறைவன்- சிவன் தானே வந்தாட்கொண்டதாகவே பாடுகின்றார். அந்த எளிவந்த கருணையை நினைந்து நினைந்து மகிழ்கின்றார்; போற்றுகின்றார்.

"வான் பழித்து இம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொள்ளும் வள்ளல்"

என்று போற்றுவார்; போற்றிப் புகழ்வார். சிவன் திருப்பெருந்துறைக் குருந்த மரத்தடிக்கு எழுந்தருளி வந்து ஆட்கொண்டார்; ஆட்கொள்ளுதல் என்றால் பொன்னும் பொருளும் போகமும் எடுத்த எடுப்பில் அருளுவதல்ல. ஞானிகள், நல்லவர்கள் பொன் முதலியவற்றை முதலில் விரும்பமாட்டார்கள். அவர்கள் இறைவன் பணி கொள்ளுதலையே விரும்புவார்கள். பணி கொள்ளுதலே, அருளிச்செய்தது போல்த்தான்!

"எது எமைப் பணிகொளுமாறது கேட்போம்!"

என்பது உம் திருவாசகம், பணியில் செலுத்திய தாய் தந்தையை- -

"நல்ல தாய் தந்தை ஏவ
நானிது செய்யப் பெற்றேன்"