பக்கம்:திருவாசகத்தேன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

போடுவது, தட்டிக் கழிப்பது, அல்லது வேலை செய்வதற்கு சோம்பற்பட்டுக்கொண்டு விடுப்புகள் எடுப்பது போன்ற தீய பழக்கங்கள் இந்தியர்களை ஆட்கொண்டிருப்பதனாலேயே இந்தியா விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் முன்னேறவில்லை, வறுமையும் ஏழ்மையும் அகலவில்லை. என்று, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது பணியை- வேலையை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் ஆர்வக் கிளர்ச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்கின்றானோ அன்றே இந்தியா வளரும்; தமிழ்நாடு வளம் கொழிக்கும்.

சிவன், வலியவந்து வாழ்தலுக்கும் உய்தலுக்கும் உரிய பணிகளை வழங்கி ஆட்கொண்டருளிய அருமையை மாணிக்கவாசகர் உணரவில்லை. வளரும் குழந்தை: பொருள்களின் தராதரம் அறியாப் பருவம் தங்கக் கிண்ணத்திற்கும் தகரக் குவளைக்கும் இடையில் மதிப்பீட்டு வேற்றுமைகளை அறிந்துகொள்ள இயலாத பருவம் போற் கிண்ணத்திற்கும் பொட்டுக் கடலைக்கும் மதிப்பீடு பிரித்தறியா நிலை தின்னும் பொருளாதலால் பொட்டுக் கடலையிலேயே ஆர்வம் தலைகாட்டும். அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைக்குப் பொற் கிண்ணத்தின் மதிப்பீடு தெரியாமல் பொட்டுக்கடலையை வாங்கிக் கொண்டு பொற்கிண்ணத்தைத் தருதல் வியப்பில்லை. அதுபோல, இறைவனின் திருவருள் சார்ந்த வாழ்க்கை வழங்கப்படுகிறது: உலகியற் கவர்ச்சியால் இழுக்கப் படுகிறது. ஆன்மா- உலகியற் கவர்ச்சியிலேயே சுழல்கிறது. திருவருளை- வலிய வந்தாட் கொண்ட பெருமானின் எளிவந்த கருணையை அருமை என்று அறிந்து போற்றுவதில்லை. நெடுந்தவம் புரிந்தும் காண முடியாத இறைவன் தாமே வந்து தலையளித்து ஆட்கொண்டருளிய கருணையின் அருமை அறியாத பேதைமையை மழக்கை விலங்கு பொற்கிண்ணம்’ என்றருளிச் செய்யும் துட்பம் சிந்தனைக்குரியது; உணர்தலுக்குரியது.