பக்கம்:திருவாசகத்தேன்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"யானும் பொய் என் கெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!"

என்று அருளிச் செய்துள்ளமையை அறிக. பொய்ம்மையற்ற மெய்ம்மை வாழ்வு தேவையென்றால் பொய்யைப் பொய் என்று அறியும் அறிவு வேண்டும். பொய்ம்மையைப் பெருக்கிப் பொய்யில் கிடந்துழலும் பொய்யாய மாய வாழ்க்கையை நினைந்து அழக் கற்றுக்கொண்டால் தான் பொய்ம்மை அகலும்; மெய்ம்மை மேவும்.

மெய்ம்மை, உண்மையானது; நிலையானது; மெய்ப் பொருள் சார்பு நிறைந்தது. மெய்ப்பொருளைச் சார்ந்து வாழும் அன்பர்கள் மெய்ம்மை அன்பர்கள். மெய்ம்மை அன்பர்கள் தாம் மெய்ப்பொருளாகிய இறைவனைச் சார்தல் இயலும்; கூடும். மெய்ம்மை மேவாதாருக்கு இவ்வுலகும் இல்லை; அவ்வுலகும் இல்லை.

இறைவா, நான் பொய்யன் தான்! நான் அப்படியே பொய்யனாகவே வாழ்ந்து செத்துப் போனால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? காத்தாளக்கூடிய கங்காளன் காக்கத் தவறிவிட்டானே என்று இகழ்ந்து பேசமாட்டார்களா? பழிக்க மாட்டர்களா? இறைவா, நானும் பொய்யும் நின் கருணை கிடைக்காமையால் புறமே வந்துவிட்டோம்! என்னை எவ்வாறேனும் ஆகுக என்று வாளாவிட்டு விட்டுப் போய்விட்டாய்! இது நின் கருணைக்கு இசைந்த அறமா? பிறைசூடிய பெருமானே! பொய் நீக்கி என்னை ஆளாமை நினக்குப் பெருமைதானா? நல்லவும் தீயவும் அல்லாத எருக்கம் பூவினும் நான் கடைகெட்டவனா? இறைவா, பொய்மையை நீக்கு மெய்ம்மையை அருள் செய்க! என் பொய்யெலாம் நீயே ஏற்றருள் செய்க! நான் உன்னை அரியை என்று கருதாதது பிழைதான்! நீ எளிவந்தாட்கொண்ட அருளைப் போற்றிக் கொள்ளாதது