பக்கம்:திருவாசகத்தேன்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அரசன் கடவுளானான். இது சமூகம் தோன்றி மறைந்த வரலாறு.

மாணிக்கவாசகர் காலத்தில் சமூக அமைப்பு கெட்டிருந்ததை அவரே குறிப்பிடுகிறார். இதனை,

“சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி காயேனை”

என்று பாடுவதால் அறியலாம். சாதி குலப்பிரிவினைகள் நிலப் பிரபுத்துவம் பெற்றெடுத்த குழந்தைகள்! வளர்த் தெடுத்த செவிலித் தாய். தனி உடைமைச் சமுதாயம். திருவாசகம் “அயலவர்” என்று குறிப்பிடுகிறது. ஆக, மாணிக்கவாசகர் காலத்திலேயே “நம்மவர்” “அயலவர்” என்ற வழக்குகள் தோன்றிவிட்டன. “பொய்யர்தம் மெய்” என்பார் மாணிக்கவாசகர். கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மதப் புரோகிதர், ஆதிக்க சக்தியின் பால் சேர்ந்துவிட்டனர்; சுரண்டும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு “செல்வச் செழிப்பு, கடவுள் கருணை, புண்ணியத்தின் பயன்” என்று கூறியவுடன் சுரண்டப்பட்ட- வாழ்விழந்த மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றாலாயிற்று. அவர்கள் ஆப்தமான உறவினராக இருந்து “அயலார்” ஆயினர். நாத்திகம் பேசினர். மனிதகுல நாகரிகத்திற்கு- பாதுகாப்பிற்குக் கடவுள் நம்பிக்கை தேவை. நாத்திகம் நஞ்சு. அதே போழ்து கடவுள் நம்பிக்கை மனித நேயத்திற்கு மாறாக இருப்பின் அது நாத்திகத்தினும் கொடிது.

மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் உருக்கொள்ள வில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் சீர்குலைந்து இருந்தது. அவரவர் மனப்போக்குப்படி பேசினர்; அவரவர் விரும்பியவாறு ஒழுகினர்.

“ஊரவர் தத்தம் மனத்தன
பேச எஞ் ஞான்று கொல் சாவதுவே !”

என்று மாணிக்கவாசகரே அழுது புலம்புகிறார்.