பக்கம்:திருவாசகத்தேன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அக்காரம் தீற்றிய அதிசயம்


வாழ்வு சிறக்க சுய விமர்சனம் தேவை. விமர்சனம் என்பதைத் தூய்மை செய்தல் என்று கொள்ளலாம். ஒரு நாளில் எத்தனை தடவை கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துத் துடைத்துத் திருத்தம் செய்து கொள்கின்றோம்! அழகு செய்து கொள்கின்றோம்! அது போல நம் ஆன்மாவை- நாம் இயற்றிய செயல்களின் பயன்பாடு முதலியனவற்றை ஆய்வு செய்துகொண்டு பயனற்றவைகளைத் தவிர்த்துக் கொண்டு பயன் பாடுடைய பணிகளைச் செய்வது சுய விமர்சனம், எங்கே சுய விமர்சனம் புறக்கணிக்கப்படுகிறதோ அல்லது தரமாக அமையவில்லையோ அங்கே பிறர் விமர்சனம் வரும். ஆனால், விமர்சனம் விமர்சனம்தான்! விமர்சனம் ஆக்கத்தின்பாற்பட்டதே குற்றங் கண்டுரைத்தால் ஆக்கம் இல்லை; இருக்காது. விமர்சனம், எரியும் விளக்கில் சுடர் தட்டி விட்டு, எரிய விடுதல் போன்றது! அல்லது சுய விமர்சனம் பரிபூரண ஆக்கம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் பெரும் பான்மையானவை சுய விமர்சனப் பாடல்கள். தன்னைத் தானே ஆய்ந்து தமது குற்றங்களை உணர்ந்து திருத்தம் காணும் வேட்கையில் பாடுகின்றார்! அழுது அழுது பாடுகின்றார்! அதனாலேயே திருவாசகத்தை ஓதினால் உருக்கம் ஏற்படுகிறது. “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்றும்,