பக்கம்:திருவாசகத்தேன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இடையேயுள்ள சுவர்களும் வேலிகளும் தோன்றியது “எனது” என்பதிலிருந்து தான்! வளம்- வறுமை, களவு- காவல் பிறந்து வளர்ந்ததும் ‘என்து’ என்ற செருக்கினால் தான். பகைமைக்கும் கூடக் காரணம் ‘எனது’ தான். இந்த ‘எனது’ நீக்குதல் ‘நான்’ அகற்றுதலைவிடக் கடினம். எனது சொத்து என்பது பற்றிப் பிடித்துக்கொண்டு வளர்கிறது. ‘எனது’க்குத் தலைசிறந்த பரிவாரம் அரசு. “என’’தின் ஏவல் கேட்போர் ஆட்சியாளர்; காவல்துறையினர்; பதிவாளர் துறையினர். எனது என்ற தீமை ஆட்சிக் கட்டிலிலேயே ஏறிவிட்டது. ‘நான்’ ‘எனது’ என்பதை செருக்கு என்றது. வள்ளுவம். ‘நான்’ ‘எனது’ என்ற மாயம் மனிதனைக் கெடுத்து விடுகிறது. ஏன்? மனிதனாக வாழ அவை அனுமதிப்பதில்லை,

‘நான் என்னும் செருக்குடையவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வான்; தான் செய்யா ததைச் செய்ததாகக் கூறுவான்; பெருமையைத் தேடுவான். உரிய விலையின்றிச் செல்வத்தைத் தேடுவான். காரண காரியமின்றி, ‘நான்’ மட்டுமே கருவியாகக் கொண்டு மிரட்டி, பயமுறுத்திப் பணம் கேட்பான். “நான் ஆணையிட்டால்!” என்பான். இந்த ‘நான்’ காரணமாகப் பொய் கூறுவான். ‘எனது’ என்பது, பொய். என்ற உரத்திலேயே வளரும். பொய்யும் வளரும் தன்மையது. விளையாட்டாக அல்லது அவசியத் தேவையாக ஒரு பொய் வாழ்க்கையில் தோன்றிவிட்டால் பொய் நாளும் வளரும். ‘எனது’ உரிமைச் செல்வம் அடுக்கிய பலவாக ஆக வேண்டுமானால் பொய் தேவைப்படும். ஒரு சில நல்லவர்கள் ‘பொய்யைப்’ பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். சிறுமதியினர் பொய்யையே கருவியாகப் பயன்படுத்துவர். அடுத்தவர் செல்வத்தைப். பறிப்பர். ‘எனது’ உடன்பிறப்புக்களைக் கூடப் பிரிக்கும். கைகேயியின் மனத்தை திரித்ததுகூட “எனது” தானே!