பக்கம்:திருவாசகத்தேன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

என்ன? வள்ளுவத்தின் அடிப்படையில் விரிந்த அடிப்படையில் பொய்க்குப் பொருள் கொண்டால் குற்றம் அல்லது நலம் பயப்பனவாக இல்லாதன எல்லாம் பொய் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆதலால், பொய் என்பது, மெய் அல்லது உண்மைக்கு எதிரிடையானது என்று பொருள் கொள்ள இயலாது. தீமை செய்யாது நன்மை செய்தல் இவற்றுடன் பொய்யாமையை உடன் வைத்து எண்ணுகிறது, பகவத்கீதை. “பாவம் இயங்க அதன் கைப்பிடியாகப் பயன்படுவது பொய்” என்றான் ஜேம்ஸ்.

பொய், நஞ்சு; இல்லை! பொய் நஞ்சினும் கொடியது. மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டுப் பொய்யை மறுத்தே வந்துள்ளனர். உலக சிந்தனையாளர்கள் சில நாடுகளில் பொய்க்கு எதிரான சட்டமே இயற்றியிருக்கிறார்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டுவிட்டால் பொய் சொன்னவர்களின் நெற்றியில் நெருப்பில், பழுத்த இரும்புக் கம்பியால் சூடு போடுகிறார்களாம். நமது நாட்டில் சொல் வன்மையால் பொய்யை மெய்யாக்கிவிடுகிறார்கள். மனிதன் வளர, வளர அவனுடைய பொய்யும் வளருகிறது என்பது மாணிக்கவாசகரின் கருத்து. “பொய்மையே பெருக்கி” என்கிறார். பிறந்தவுடன் குழந்தைகள் பொய் கூறுவதில்லை. கூறவும் தெரியாது. ஆனால் வயது வளா, வளர வீடுகளும் விதிகளும் குழந்தைகளுக்குப் பொய்யைக் கற்றுத் தந்துவிடுகின்றன. அதனால், திருக்குறள் “வாய்மை” என்று ஓர் அதிகாரமே இயற்றியது.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை கன்று”

என்பது திருக்குறள்.

பொய்யைத் தவிர்க்க என்ன வழி? நாட்டில் செங்கோல் தழுவிய ஆட்சி இருக்க வேண்டும். இன்றைய