பக்கம்:திருவாசகத்தேன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 163

ஆட்சிமுறையில் பொய்க் கணக்கு, இரண்டாம் கணக்கு என்றெல்லாம் பகிரங்கமாகவே பேசப்படுகின்றன. கருப்புப் பணம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், எங்கும் பொய் அரங்கேறுகிறது. கொடுங்கோல் அரசு அகற்றப்படவேண்டும். பொருள் ஈட்டவும், வைத்துக்கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். கொடுங்கோன்மை அகன்றால் மட்டும் போதாது. ஆற்றல் வளர வேண்டும். ஆற்றல் பெற்றவர்கள் தற்காப்புக்குப் பொய்யைக் கருவியாகப் பயன்படுத்துவது இயற்கை. சத்தியம் சாகாது.

பொய்யைக்கூட ஒரளவு சமாளிக்கலாம். மெய் போலப் பொய் கூறுபவரை சமாளிப்பது அரிது. இங்ஙணம் மெய்போலப் பொய் கூறுபவர்களைப் பற்றி தான் “பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்” என்று மாணிக்கவாசகர் கூறினார். ஆதலால், பொய்களைத் தவிர்த்து வாழாதவர்கள் சொர்க்கத்தை அடைய முடியாது. பொய்யால் புறமேயாகும் தன்மை பெறுவர். பொய்க்குத் துணை ‘யான்’ என்பது. யானும் பொய்யும் புறமே போந்தோம் என்றார். பொய்க்கு யான் துணை யானுக்குப் பொய் துணை.

மனிதன் சொர்க்கம் அடையவேண்டுமா? அவன் ‘யான்’ 'எனது என்ற செருக்கு உடையவனாக இருத்தல் கூடாது என்றார் திருவள்ளுவர். இவற்றுள் யான் மிகவும் மோசமானது. ‘யான்’ உறவுப் பகை, நட்புக்குப் பகை; காதலுக்குப் பகை; சமுதாயத்துக்குப் பகை; ஆதலால், ‘யான்’ என்ற செருக்கு அறவே ஆகாது. ‘யான், எனது’ என்ற அகந்தை எள்ளளவும் மாறவில்லை” என்பது தாயுமானவர் வாக்கு. ‘யான்’ என்ற செருக்கில் விளைந்த மோதல்களும் கலகங்களும் பலப்பல. ‘எனது’ என்பதால் எழுப்பப்பெற்ற சுவர்களும், போடப்பட்ட வேலிகளும் எண்ணிலடங்கா. பூட்டு வியாபாரிகளின் நம்பிக்கைக் குரிய மூலதனமே “எனது” என்பதுதான்! ஒரு முனிவர்-