பக்கம்:திருவாசகத்தேன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 177

போதமும் கூறும்! சிவம் ஆதியாக நிற்றல்போல அந்தமாகவும் நிற்கிறது. உலகம் அனைத்தும் ஒடுங்கும் கடையூழிக் காலத்திலும் உள்ளவன் சிவன். அவனே உயிர்கள் களைப்பாறிப் புத்துயிர்ப்புப் பெறுவதற்குக் கடையூழியில் உலகத்தை ஒடுக்கிப் பின் புதுப்பித்தருளு கின்றான். ஆதலால், சிவனே அந்தம், ஆதி, முதலும் நடுவும் ஈறும் அவனே!

எல்லா உயிர்களின் தோற்றத்திற்கும் காரணம் இறைவனே! எல்லா உயிர்களும் இறைவனிட்த்தில் தோற்றம் என்பது படைப்பு என்று பொருள் தராது. தோற்றம் = தோன்றுதல்; புலப்படுதல். “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற திருக்குறளுக்குத் “தோன்றின்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும் பாங்கே இங்கேயும் கொள்ள வேண்டும். அதாவது பலரறிய மக்கள் மன்றத்தில் தோன்றும் பொழுது புகழொடு தோன்றுக. அங்ஙணம் புகழ்பட வாழும் தகுதி பெறாவிடின் தோன்றாதே என்பதுதான். அந்தக் குறளுக் குரிய உண்மைப் பொருள் என்றும் உள்ள உயிர் ஆணவத்தால் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த நிலை, தோன்றா நிலை. இறைவன் கருணையால் செயற் கருவிகளுடன் கூடிய உடலையும் அறிவுக் கருவி கருவிகளாகிய (கரணங்களை) புலன்களையும் கொண்டு அறிவு விளக்கமுறும் நிலையில் தோன்றியதே தோற்றம்.

எல்லா உயிர்களும் பொன்னும் பொருளும் பெற்று வாழும் வாழ்வளிப்பதால் “பொற்பாதம்” என்றார்.

பொன்னும் மெய்ப் பொருளும் கருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை

என்னும் நம்பியாரூரர் வாக்கும் அறிக. பொன் வேறு; பொருள் வேறு. பொன்- தங்கம். இன்று பணம் முதலியனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பொருள்-நுகர் பொருள்கள், உடலோடியைந்த உயிர்களுக்கு உயிர் வாழ உணவு தேவை; மருந்து தேவை. உடை தேவை.

தி- 12