பக்கம்:திருவாசகத்தேன்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

களிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியன தேவை. இவையெல்லாம் நுகர்பொருள்கள். திருவள்ளுவரும்

“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை”

என்றார். இங்குப் பொருள் என்பது உயிர் வாழ்தலுக்குத் தேவையான உணவையே குறிக்கும்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

என்றும் கூறுவர். உணவு, உயிராகாது. உணவால் உயிரைக் கொடுக்கவும். இயலாது. உடலில் உயிரைக் காத்து வைத்து வாழ்வளிப்பது உணவு.

போகம்- இன்பம். மாணிக்கவாசகர் “போகமாம் ஆங்கழல்கள்!” என்று பாடுகின்றார். போகம் என்பது பொருளைத் தரவல்லது. போகம்- இன்பம். உயிர்க்குலத்துக்கு இன்பம் தரும் வாயில்களும் இன்பம் தருபவையும் பலப்பல. ஆன்மாக்கள் வளர்ச்சி அடைய, அடைய இன்பத் துறைகளும் மாறும். குழந்தைப் பருவத்தில் தேவை விளையாட்டுப் பொருள்கள்; இனிப்பு மிட்டாய்கள்! இளமையில் தேவை கல்வி; கற்றோர் வாய்க் கேட்டல். வாலிபப் பருவத்தில் காதலின்பம். வாலிபப் பருவத்தில் இன்பத் துறைகள் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்பப் பலப்பலவாகிவிடும். சாதனை செய்தல் ஆகியவற்றிலும் இன்பம் காண்பர். முதிர்ந்த- ஆன்ம முதிர்ச்சி நிலையில் இறைவன் கழ்லேத்தும் இன்பத்தையே இன்பமெனக் கொள்வர். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே” என்றும் மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.

இறைவனுடைய திருவடி யின்பமே இன்பம். உயிர்கள்- ஆன்மாக்கள் அடையும் முடிவிலா இன்பம் திருவடியின்பமேயாம். திருவடியின்பத்தை ‘ஆனந்த வெள்ளம்’ என்று கோவையார் போற்றும் திருவடியின்ப மாகிய ஆனந்த வெள்ளம் வற்றாது; முற்றாது. அந்த ஆனந்த வெள்ளத்தினை வழங்குவதே ஆடல்வல்லானின் கூத்து!