பக்கம்:திருவாசகத்தேன்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 181


இறைவன் சிவனைக் கண்டறிவார் இல்லை என்பது திருவாசகம். இறைவனைக் கண்ட பிறகுதான் நம்புவது என்பது சமயநெறிக்குப் பொருந்தாத விவாதம். காண்டல்- கண்களால் காண்பது. கண்களால் காணக் கூடியவன்தான் கடவுள் என்பதை

“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”
“கண்ணால் யானும் கண்டேன் காண்க”

என்றருளியுள்ளமையால் அறிக. கண்கள் அறிவுப் புலனுடன் தொடர்பு கொள்ளவில்லையானால் காட்சி நிகழ்ந்தாலும் பொருள் புரியாது. பொருளைப் பற்றிய தாகக் காட்சியமையாமல் போய்விடும். சிந்தனை செய்து தெளிந்து அறிவால் அறிந்து உணர்ந்து அனுபவித்த பிறகுதான் கடவுள், கண் காட்சிக்குப் புலனாகும். இது சமய அனுபவ நெறி!

அறிவு என்பது கல்வி. மட்டுமல்ல, கல்வியின் பயன் அறிவு. கற்றவர்களிலும் மூடர்கள்- அறிவில்லாதவர்கள் உள்ளனர். ஒலி நாடாப்போல ஒப்பிப்பர்; அனுபவமும் இருக்காது செயலும் இருக்காது; ஒழுகலாறும் இருக்காது; நான்முகன் வேதங்களை நன்றாகப் பயின்றவன். வேதங்களுக்கு நாயகன், கலைமகள் நான்முகனின் மனைவி. நான்முகனின் நாவிலேயே இருக்கிறாள். ஆயினும் என்? சமய ஞானம் இல்லையே! பிரணவத்தின் பொருள் தெரியாமல் திருமுருகன் கையால் குட்டுப்பட்டவனாயிற்றே!

நான்முகன் கல்வியின் துணை கொண்டு இறைவன் திருமுடியைக் கண்டு வருவதாகக் கூறினான். சூளுரைத் தான். அன்னத்தின் உருவம் கொண்டு முடியைத் தேடி வானோக்கிப் போனான். திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகள் கணவன். இறைவன் திருவடியை பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பதமலரைக் கண்டு வருவதாகச் சூளுரைத்தான்; பன்றியின் உருவெடுத்தான்;