பக்கம்:திருவாசகத்தேன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

விருப்புவதில்லை; விரும்பி வரவேற்பதில்லை, ஆனாலும் மனிதகுலம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாது போனாலும் சரி, இறைவன் உயிர்க்குலத்தை உய்யும் வகையில் எல்லாம் ஆட்கொண்டருளத் தவறிய தில்லை. அவனே வலிந்து செய்யும் கருணை நிறைந்த கடமை இது.

சாதாரணமாக உலகியலில் உயர் நிலையில் உள்ளவர்களிடம் தாழ்ந்தவர்கள் போய் அறிமுகம் செய்து கொள்வதே. பழக்கம். ஆனால், இறைவன் ஆட் கொண்டருளும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் பெரியோனாகிய இறைவன், அவனுடைய கருணையினால் ஆட்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள உயிர்களிடம் தாமே போய் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையே நடைமுறை. இந்த மண்ணகத்தில் வினைகள் இயற்றுதல், இலாபம் ஈட்டல், புகழ் பெறுதல், அதிகாரம் செய்தல் அம்மம்ம! எத்தனை வினைகள்! எத்தனை எத்தனை செயல்கள்! இந்தச் செயல்களைச் செய்யும் பொழுதெல்லாம் பொறிகளில் படியும் கறைகள்! புலன்களில் ஏறும் அழுக்குகள்! ஆன்மாவில் - உயிரில் ஏற்படும் விகாரங்கள்! இவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது அழுக்குடலேயானாலும் அழுக்கேறிய ஆன்மாவேயானாலும் தாயினும் சாலப்பரிந்து ஆட்கொள்ள இறைவன் வருகின்றான். ஆனால் ஆன்மாக்கள் ஆட்பட ஒருப்படுவதில்லை; விரும்புவதில்லை. அறுவை மருத்துவத்துக்குப் பயந்து நோயினால் தொல்லைப்படுவாரில்லையா? பத்தியத்துக்குப் பயந்து நோய்ப் படுக்கையில் கிடப்பாரில்லையா? அதுபோலத்தான். ஆனால், இறைவனின் கருணை கைவிடுவதில்லை. நோயாளி அறுவை மருத்துவம் செய்து கொள்ள விரும்பாது போனால் மருத்துவன் விடலாமா? விடக்கூடாது. அது போல, இறைவன் உயிர்களை எப்போதும் நரகத்திலும் கூடக் கைவிடமாட்டான். இறைவன் சிறந்த மருத்துவன்,