பக்கம்:திருவாசகத்தேன்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மேவும். சிவநெறி ஒழுக்கத்திற்குரிய தகுதிப்பாடுகளுள் ஒன்று "தாழ்வெனும் தன்மை", அதாவது, அடக்கம், நிலத்தினைக் கிண்டிக் கொண்டு விண்நோக்கி வளரும் மரம் நிலத்தடியிலும் வேர் பாவும். நிலத்தடியில் பாவும்' வேரின் வலிமையில்தான் மரத்தின் வலிவு இருக்கிறது. அதுபோல ஆன்மாக்களின் வளர்ச்சி- நிலைப்பாடு ஆரவாரத்தில் இல்லை; அடக்கத்தில்தான் இருக்கிறது. தாழ்ந்து பழகும் இயல்பில்தான் வளர்ச்சியின் அமைவு: இருக்கிறது.

"தாழ்வெனும் தன்மை நோக்கித்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது"

என்று அருணந்திசிவம் கூறுவார். "கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை" என்று கூறுவார் மாணிக்க வாசகர், திருத்தொண்டத் தொகையின் தோற்றமே இதற்கு ஒரு சான்று. தொண்டர்நாதனைத் துரதனுப்பிய நம்பியாரூரர், "அடியார்க்கும் அடியேன்" என்று பாடும் நிலை அடக்கத்தின் அருமையை- பயனை விளக்கத்தானே! ஆதலால் மாணிக்கவாச்கர் தம்மை வியந்து பாராட்டிக் கொள்வதில்லை. திருவாசகம் முழுதும் தாழ்வின் தன்மையே பரவிக்கிடக்கிறது. மாணிக்கவாசகர் தனது தகுதியை அங்கீகரித்து ஒப்புக்கொண்டதில்லை! வியந்து பாராட்டிக்கொண்டதும் இல்லை. இறைவனின் அளப்பரும் கருணையே ஆட்கொண்டது. என்பார். ஆயினும் மாணிக்கவாசகர் இறைவனின் அருமையை- ஆட்கொண்டருளிய அருமையை உணரவில்லை; அறிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மழலை மொழி பேசும் குழந்தை; விளையாட்டுப் பிள்ளை, பிள்ளை கையில் தங்கக் கிண்ணம் கிடைத்தது. குழந்தைக்குத் தங்கக் கிண்ணம் தேவையா? விளையாட்டுப் பொம்மை தேவையா? தின்னும் மிட்டாய் தேவையா?