உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 37

பருவத்தின் இச்சையே தேவை! அதுவே வெளிப்படும். குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது. தங்கக் கிண்ணத்தைத் தந்து அதற்கு ஈடாக ஒரு பொம்மையை அல்லது ஒரு மிட்டாயை வாங்கினாலும் வியப்பில்லை. அதுபோல மாணிக்கவாசகர் செய்யவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உண்மையைத் தமது ஆன்மிக வாழ்க்கைக்குச் சான்றாகக் காட்டுகிறார். ஏன்? மாணிக்க வாசகரைப் போல இறைவனின் அருமையை உணர்ந்தவர்களும் இல்லை; தேடினவர்களும் இருந்ததில்லை. அந்தண வாழ்வைத் துறந்து அமைச்சு வாழ்விற்குச் சென்றமையை எண்ணிப் பாடுகின்றாரா? வாழ்க்கையின் குறிக்கோள் ஆன்டிாவைப் பூரணத்துவமாக்கும் 'தவ வாழ்க்கையை மேற்கொள்ளுதலேயாம். அஃதில்லாமல் அமைச்சு வாழ்க்கையை ஏற்றதை எண்ணி வருந்துகின்றார் போலும்!

இனம், இனத்துடன் சேரும். இஃது இயற்கை. மாணிக்கவாசகருடன் பலர் இருந்தனர். அவர்கள் மெய்யன்பர்கள். அவர்கள் சிவபெருமானிடம் எளிதில் சேர்ந்தனர்; மெய்ம்மை ஆயினர். ஆனால், மாணிக்க வாசகர் பின்தங்கி விட்டார்! ஏன்? இறைவனை அடைதலுக்கு மெய்ம்மை தேவை. மாணிக்கவாசகரிடம் மெய்ம்மை இல்லை. பொய்ம்மையே இருந்தது!- இது, மாணிக்கவாசகரின் சொந்த விமர்சனம்! உண்மை உணர்வது நமது கடமை, மாணிக்கவாசகர் திருப்பெருந்: துறையிலும் செயல் மாள விடவில்லை. திருப்பெருந் துறைத் திருக்கோயிலைக் கட்டினார். அல்லவா? அது ஒரு பணி செயல் ஆதலால், செயல் அடங்கவில்லை என்று எண்ணினால் தவறில்லை! தவக்கோலம்! பத்திமைப் பரவசம்! ஆயினும், செய்வினைகளும் இருந்தன. வினை நீக்கம் பெற்ற வாழ்க்கை வந்தமையவில்லை. அதனால் 'பொய்யிலங்கெனை' என்று கூறினார் போலும்.