உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

யாகிய தாய்! இந்தத் தாய் ஆன்மாக்களை மறப்பதில்லை. அதனால் நினைவும் நிகழ்வதற்குரிய வாயில் இல்லை. சிவசக்தியாகிய தாய், குழந்தை மறுத்தாலும் மிகவும் பரிவுணர்வுடன் பாலூட்டுவாள். குழந்தை பாலின் தேவையை அறியாது. குழந்தையின் தேவை தாய்க்குத் தானே தெரியும். ஆதலால், குழந்தை மறுத்தாலும் இந்தத் தாய் விடுவதில்லை. மிகவும் பரிவுணர்வுடன் இழுத்துப் பிடித்துப் பாலூட்டுவாள்; பால் மட்டுமா? உணவினால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை; மருந்தும் தேவை! பாலுண்ணும் குழந்தை மருந்துண்ண மறுக்கும் தாய் மருந்தும் தருவாள்! சிரிப்பினால் மருந்தும் கதையினால் கருத்தும் வழங்குபவள் தாய்!

தாய், தனது பிள்ளையின் தகுதி கருதி அன்பு காட்டுவதில்லை. தகுதியிருந்தால் மகிழ்வாள். தகுதி இல்லையானாலும் தன் பிள்ளையைச் சீராட்டவே எந்தத் தாயும் விரும்புவாள். ஆனாலும் தாயின் அறிவு, காரண காரியத்துடன் இயங்கும். தன் குழந்தை பாவச் செயல் செய்வதாயிருந்தால் எந்தத் தாயும் தாங்கிக் கொள்ளமாட்டாள்! எந்தத் தாயும் தன் மகவை "சான்றோன்" என்று கேட்கவே விரும்புவாள். அதேபோழ்து தன் குழந்தையைப் 'பாவி' என்று தாய் வெறுத்து ஒதுக்கவும் மாட்டாள்! தாயின் அன்பு தன் குழந்தையின் அறியாச் செயல்களுக்கு - அவை அறியாச் செயல்கள் என்று அறிந்தாலும் உடன் படுவாள்! உடன் போவாள்! அன்பைப் பெருக்கி, நம்பிக்கையை வளர்த்து, பைய நன்னெறிக்கு அழைத்து வந்துவிடுவாள்! உடைப்பது எளிது; ஒறுப்பது எளிது; அழிப்பது எளிது; திருத்தம் காண்பது அரிய பணி! இதற்கு நிலத்திலும் பொறுமை தேவை. நலம் நோக்கித் திருத்தும் பணியாதலால் "பைய" என்ற சொல், வழக்கிற்கு வருகிறது. "பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக!” என்ற சேக்கிழார் வாக்கு, அனுபவத்தின் முதிர்ச்சியில் பிறந்தது, மாணிக்கவாசகரும் "பையத் தாழுருவி"