பக்கம்:திருவாசகத்தேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 43

என்பார். இத்தகு திருத்தப்பாட்டுப் பணியில் நிற்க, சராசரி மனிதரால் இயலாது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர்களாலேயே முடியும்!

மிகவும் பாவம் செய்வதற்குக் காரணம் அந்த மகவின் உடல்! உடல் வளர்ந்த அளவு ஆன்மா வளரவில்லை. ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் உடல் வலிமை தானே பாவம் செய்கிறது! ஆதலால், தாய் ஊன்பொதி உடலைத் திருத்துவாள். உடலின் ஆதிக்கம் ஆன்மாவின் மேலிருந்து பணி கொண்டால் பாவம் வளரும். உடலை, ஆன்மா பணிகொண்டால் புண்ணியச் செயல்கள் நிகழும். உடல், ஆன்மாவை வேலை வாங்கினால் உடலின் ஏவலை ஆன்மா செய்யும் நிறைவேற்றும்! இதனால் மிகுதியான உணவைத் தின்றால் உடல் கொழுக்கும்; பருமனாகும்; முரட்டுத்தனம் மேவும்! இது உடல் நலத்திற்கு நல்லதல்ல; சமூகத்திற்கும் நல்லதல்ல. வன்முறையின் தாயே, ஆன்மாவை மறுத்த உடலின் ஆதிக்கம்! “ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்" என்பார் சுந்தரர். ஆதலால்! ஆன்மாவின் ஆளுமைக்குள் உடல் இருக்க வேண்டும். உடலின் எடை குறைதல், உடலுக்கும் நல்லது; ஆன்மாவுக்கும் நல்லது. உடலின் தேவைகள் குறைதல் வேண்டும். ஆன்மாவின் தேவைகள் பெருகி வளர வேண்டும். அதனால், சக்தியாகிய தாய் உடலை உருக்கி இளைக்க வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து ஆன்மாவின் ஞானஒளியைப் பொருத்துகிறாள். ஆம்! ஒளி, ஞானத்தின் சின்னம்! முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் "ஒளியை. என் உடலில் நிரப்பு" என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார். இத்தகு ஒளியால் உடலின் எடை குறைகிறது. உடல், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்மா ஞான ஒளியைப் பெற்றிருக்கிறது! இதனால் இன்பம் மேவுகிறது. சாதாரண இன்பமன்று அந்தம் ஒன்றில்லாத இன்பம்! ஆனந்தமாய இன்பம்! இடையீடில்லாத இன்பம்!