வாழ்க்கையே ஒரு வாணிகம் தான்! வாணிகம் தவறல்ல. ஆனால், இலாபமே வேட்டையாக எண்ணி வாழ்தல் தீது. இருபாலும் பயனும் மகிழ்வும் உண்டாகும் வகையில் நடப்பதே நல்ல வாணிகம். ஆன்மிக வாழ்க்கையிலும் வாணிக நடைமுறை உண்டு.
"கொண்டும் கொடுத்தும் ஈசர்க்கு ஆட்செய்தல்" என்று. இசைப்பா கூறும். "மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு" என்பார் திருவள்ளுவர். இஃது ஓர் உயர்வு நவிற்சி! மாரி, உயிரினங்களுக்குச் செய்யும் அளவு நாம் அதற்குக் கைம்மாறு செய்ய இயலாது என்பது உண்மை. ஆயினும் மழைக்குரிய சாதனங்களாகிய ஏரி, குளங்களைப் பராமரிப்பதும், புயலை நீர்த் திவலைகளாக மாற்றும் குளர்ச்சியைத் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதும் நாம் மழைக்குச் செய்யும் கைம்மாறு! ஆனாலும் மழையின் உதவி அளவிலும் பயனிலும் கூடுதலானது. பொதுவாகவே மானிடரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே நிறையக் கொடுக்கும்; குறைவாகப் பெறும். மரங்கள் நம்மிடத்திலிருந்து பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் திருப்பித் தருவது அதிகம். பசு மாடுகள் நம்மிடம் பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் தருவது அதிகம். இதுதான் நாகரிக வாழ்க்கை; பண்பாட்டு வாழ்க்கை! மானிடரோ