50 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
திருப்பெருந்துறை இறைவன், மாணிக்கவாசகரின் ஆடலை இடமாகக் கொண்டு எழுந்தருளினன். இதனால் மாணிக்கவாசகர் புறம்போகாமல் பாதுகாப்புக் கிடைக்கிறது. இறைவனால் மாணிக்கவாசகரின் அன்பைத் தூண்டி அனுபவிக்க முடிகிறது. திருவாசக அமுதம் பருகக்கிடைக்கிறது. இருபாலும் நலஞ்சார்ந்த் பண்டமாற்று! விண்ணவர்கள் தேடரிய, பழமறைகள் தேடரிய, முனிவர்கள் தேடரிய திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரின் உடலையே திருக்கோயிலாகக் கொண்டனன்! இந்த அரிய அருட்செயலுக்குக் கைம்மாறு செய்ய இயலுமா? பொருள் பற்றிச் செய்யும் பூசனைகள் கைம்மாறு ஆகுமா? ஆகாது ஆகாது! புன்புலால் யாக்கை! இதில் புண்ணியத்தின் புண்ணியம் சிவம் புகுந்து முடியமர்ந்தருள் செய்தலுக்கு ஏது கைம்மாறு? இந்த உலகியலில் சாதாரணமான செயல்களுக்கே கைம்மாறு செய்ய இயல்வதில்லையே! முடியவில்லையே! நமது நாட்டு விஞ்ஞானிகள்- குறிப்பாகக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் வழங்கும் அறிவியல் கொடைக்கு எப்படிக் கைம்மாறு செய்ய இயலும் நன்றி! என்று சொற்களால் கூறலாம்! அது எங்ஙணம் கைம்மாறு ஆகும் பெற்றதற்கு ஏற்பக் கைம்மாறு கொடுத்தல் வேண்டும்! அதுதான் உண்மையில் கைம்மாறு! இன்று, நன்றி கூறுதல் ஒரு சடங்கு இங்ஙணம் இருக்க இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? அப்பரடிகள் கூறியதைப் போல "உன்னை நினைந்தே என் ஆவி கழியும்” என்பதே கைம்மாறு. மாணிக்கவாசகரும் "நின்று ஆடிப்பாடி அலறவேண்டும்" என்கிறார். உடல் எல்லாம் நெஞ்சமாக, கண்ணாக அலறி அழவேண்டும் என்கிறார்.
திருப்பெருந்துறையுறை. சிவன் மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டான்! மாணிக்கவாசகரும் விருப்புடன் ஆட்பட்டார். இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன்