உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காலத்தின் நில்லாமையை அப்பரடிகள் விளக்கும் முறை எளிதில் விளங்குவதாய் அமைந்துள்ளது. கைகள் இரண்டையும் இணைத்து ஒரு தடவை உற்று நோக்குங்கள். விரல்களுக்கிடையில் ஓட்டைகள்! கைகள் இரண்டால் தண்ணிரை அள்ளி ஓட்டைப் பானையில் ஊற்றி குடத்தை மூடி தண்ணீரைக் காப்பாற்ற நினைத்த மனிதனின் மனப்பாங்கினை ஒத்தது மனிதன் காலத்தை அனுபவிக்கும் பாங்கு என்று விளக்குவார்.

கோடி தீர்த்தம் கலந்து குறித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே!

(அப்பரடிகள்- தேவாரம்)

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வானது உணர்வார்ப் பெறின்

என்றது திருக்குறள்.

ஒரு மரம் ஒரே அறுவையில் விழுந்துவிடுவதில்லை! பல அறுவைகளால் நூல் நூல் அளவாக அறுபடுகிறது. அப்படித்தான் வாழ்க்கையும் ஒரு நாளில் முடிவதல்ல. பல நாட்கள் கழிந்த பின்னேயே முடிகிறது. ‘காலம்’ என்ற நியதி கடவுள் திருவுள்ளத்தின் வழி அமைந்தது. ஏன்? உயிர்களின் மேம்பாட்டை ஒரு வரையறுத்த காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம்! இல்லையெனில் உயிர்கள்- மனிதர்கள் “இன்று நன்று; நாளை நன்று" என்று பேசியே காலங்கடத்திவிடுவர். “நாள் பார்த்தல்” என்ற மரபு நாளைக் கணித்தல், நாளைப் பாதுகாத்தல் என்ற அமைவிலேயே தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் ‘நல்ல நாள்’ ‘கெட்ட நாள்’ என்ற சித்தாந்தம் தொடங்கி விட்டது.